தமிழகம்

“தவெக அரசியல் பயணத்தை திமுக முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது” - விஜய்

தமிழினி

சென்னை: “அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரச்சார முன்னெடுப்புகளை திமுக அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பொதுக் கூட்டத்துக்குப் பின் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.

நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.

அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வருக்கும், உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.

அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரச்சார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் திமுக அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது.

தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வென்று காட்டுவோம், வாகை சூடுவோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT