சென்னை: ‘தவெக ஆட்சி அமைத்தால், 2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளின் பிள்ளைகள் படிப்புச் செலவு ஏற்கப்படும்; 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்; 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் வெளியிட்ட வாக்குறுதிகள்:
> “உரம் பதுக்கி வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. தவெக ஆட்சிக்கு வந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
> 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மேல் நிலமுள்ளவர்களுக்கு 50% வரை கடனை ரத்து செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.
திமுகவைப் போல அனைவருக்கும் என சொல்லிவிட்டு அதில் தகுதி பார்த்து பாகுபாடு காட்ட மாட்டோம். அனைத்தையும் வெளிப்படையாக அறிவிப்போம்.
> 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, ஒன்றிய அரசு ஊழியராக இல்லாமலிருக்கும் பட்சத்தில், அவர்களது பிள்ளைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வகையான படிப்பின் முழு செலவுகளையும் அரசே ஏற்கும்.
> ஒன்றிய அரசு நெருக்கடியே கொடுத்தாலும் விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்; முழுமையாக நிராகரிப்போம். விவசாயிகள் பக்கமே நமது ஆட்சி நிற்கும்.
> நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு பைசா கமிஷன் கூட வாங்காமல் பார்த்து கொள்ளப்படும். கமிஷன் வாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
> 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். அரிசி தவிர்த்து மற்ற ரேஷன் பொருட்கள் பாக்கெட்டில் விநியோகிக்கப்படும்.
> கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், பஸ் வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்குதான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
> நமது குழந்தைகள், பெண்கள், இளைஞர்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
அரசு வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும். அப்படி செய்துவிட்டால் அவர்களுக்கான ரூட்டை நமது இளைஞர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
இத்தனை கோடி அத்தனை கோடி என விளம்பரம் மட்டும் செய்யாமல் உண்மையான ஒப்பந்தம் போட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதை செயல்படுத்தினாலே அனைத்தும் தன்னால் நடக்கும்" என்றார் விஜய்.
தஞ்சை மண்ணின் பெருமையை உணர்த்தும் விதமாக விஜய் பச்சை நிற துண்டு அணிந்திருந்தது கவனிக்கத்தக்கது.
பின்னர், ‘எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம், இது நிஜம்’ என்ற உறுதிமொழியை தொண்டர்களை ஏற்க வைத்தார்.