படம்: ஜெ.மனோகரன்
கோவை: “தவெக தலைவர் விஜய்யிடம் இன்ஜினே இல்லை. திமுகவினருக்கு அண்ணா பற்றி எதுவும் தெரியாது” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுகவை தொடங்கிய அண்ணா 2 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். அண்ணா என்ற அழகிய பசு மீது அமர்ந்திருக்கும் காக்கா போன்றே திமுக உள்ளது. அண்ணா வழியை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் திமுகவை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திமுக மீது இருக்கும் வெறுப்பு இன்று திராவிட சித்தாந்தத்தின் மீது இருக்கும் வெறுப்பாக மாறியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெரியும். திமுக அமைச்சர்களை ஓர் அறையில் அமர வைத்து, அவர்களிடம் அண்ணா குறித்து பத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க கூறினால், அவர்களுக்கு எதுவும் தெரியாது. 2024 மக்களவைத் தேர்தல் அவர்களுக்கு ஓர் அறிகுறி தான். முன்பு 56 சதவீதமாக இருந்த வாக்கு அவர்களுக்கு 41 சதவீதமாக குறைந்துள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி என்ற உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்து அவர்கள் முகம் பார்க்கிறார்கள்.
அடிமைக் கட்சி என்பது எது? காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே விஜய்யை பார்த்து பேசினேன் என்று கூறுபவரை, தமிழக காங்கிரஸ் தலைவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. அதற்கும் அவர் டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறுகிறார். இதுதான் அடிமைக் கட்சி. எதிராக பேசுபவரை கூட அவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை பொறுத்தவரை, அவரிடம் இன்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இருக்கிறதா? வண்டி இல்லை, சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து டப்பா இன்ஜின் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது. தலைவர்கள் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்கள். எங்கள் கட்சி தொண்டர்களும் வீதி, வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். ஆனால், விஜய் மக்கள் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும், ஆரவாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகிறார். உங்களை சிந்திக்க வைக்க விஜய் முயல வேண்டும். நான் எதற்காக கட்சியை தொடங்கினேன். இதுவரை தமிழ்நாட்டுக்கு செய்யாத எதை நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்பதை கூற வேண்டும். எனவே, தமிழ்நாட்டுகளை சிந்திக்க வைப்பதாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
பாத்ரூமில் பொதுமக்கள் இடத்தில் முகத்தை மூடிக்கொண்டு கிறுக்கக் கூடிய நபர்கள்போல் திமுக மாறி போய்விட்டது. பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அல்வா கொடுத்து விட்டதாக கூறுகிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு தரிகட்டுப் போய்விட்டது. 5 ஆண்டுகளில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை. அவர்கள் தான் அல்லா கொடுத்துள்ளார்கள்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழ்நாடு முழுவதும் சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு பெட்டி மூலம் மனுவாக பெற்று வருகிறார்கள். எங்களது தேர்தல் அறிக்கையில் அனைத்து விஷயங்களுக்கும் பதில் கிடைக்கும்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகுல் காந்தி பேசியது பச்சைப் பொய். பத்திரிகைகளில் எழுதுவதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால், அதற்கு மட்டும்தான் பதில் வர முடியும். சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. எனது தந்தை உடல்நிலை குறித்து நான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, தேர்தல் அடிப்படை வேலைகள் பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்துக்கு தயாராக உள்ளேன். நான் இது குறித்து மாநில தலைவர் நைனா நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் பேசி உள்ளேன். இப்போதைக்கு அதிகம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. சிங்காநல்லூரில் வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி தலைமை நியமிக்கும்.
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று அதிக மெஜாரிட்டியுடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதற்கு நாங்கள் பாடுபடுவோம். திருப்பரங்குன்றம் விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அவர்களுக்கு பின்னணியில் இருந்து உத்தரவிட்டவர்கள் யார் என விசாரிக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினார்.
பட்ஜெட் குறித்து...
“மாநிலத்தின் மக்கள் தொகை, பரப்பளவு, பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான பங்கீடு, மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல், இயற்கை வளத்தை பாதுகாத்தல், நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசு செலுத்தும் பங்கு ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தவகையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு நிதி குறைந்து, நமக்கு அதிகமாகி உள்ளது.
இது அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட். எம்.எஸ்.எம்.இ பொறுத்தவரை கடன் எந்த வகையிலும் குறையவில்லை. 10 ஆயிரம் கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு நாம் இதற்கு என்ன செய்கிறோம் என்பதை கூற வேண்டும். தமிழ்நாட்டின் பட்ஜெட் நாலு லட்சம் கோடி. ஆனால், 52 லட்சம் கோடி பட்ஜெட்டில், 14 லட்சம் கோடியை மத்திய அரசு உள் கட்டமைப்பிற்கு ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு எவ்வளவு ஒதுக்கியுள்ளது?. உள்கட்டமைப்புக்கு ஒன்றும் செய்யவில்லை.
முதல்வர் எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருக்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். 2026 ஏப்ரலுக்கு பிறகு வரக்கூடிய தே.ஜ.கூட்டணி அரசு, அடுத்த 5 ஆண்டுகாலம் மத்திய அரசின் பலனை முழுமையாக பயன்படுத்தி தமிழ்நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும்” என்றார் அண்ணாமலை.