சி.டி.நிர்மல்குமார்

 
தமிழகம்

தவெக உத்தேச அமைச்சர் பட்டியல் தயாரித்தாக திமுக பொய்ப் பிரச்சாரம்: சி.டி.நிர்மல்குமார்

தமிழினி

சென்னை: “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உத்தேச அமைச்சர் பட்டியல் விவகாரம் முற்றிலும் பொய்யான பிரச்சாரம். திமுகவினரே இது போன்று திட்டமிட்டு பரப்புகின்றனர்” என தவெக இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அலை அலையாக வாக்களித்துள்ளனர். தோல்வி பயத்தால் திமுகவினர் வழக்கம்போல் ரவுடி தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் தவெகவினர் தாக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கில் இரவு ஒரு மணி வரை கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எல்லா இடத்திலும் அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியோடு திமுகவினருக்கு துணை போகின்றனர்.

நாங்கள் அளித்த புகார் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பேருந்து வசதி வேண்டுமென்றே தடை செய்யப்பட்டது. முக்கியமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. 20 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

ஸ்டாலினும், உதயநிதியும் செய்யும் ஒரே பெரிய வேலை தேர்தலில் பிரச்சாரம் செய்வதுதான். இனிமேல் அவர்களுக்கு முழு ஓய்வுதான். தீயசக்தியான திமுகவை எதிர்த்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் களத்திலேயே இல்லாத பாஜகவைப் பற்றி எதற்கு பேச வேண்டும். மக்களே புறக்கணித்த கட்சி பாஜக. அதே வேலையில் பேச வேண்டிய இடத்தில் நிச்சயம் பேசுவோம்.

முதல்வர் கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இம்முறை அதிகப்படியான மக்கள் வாக்களித்துள்ளனர்" என்றார்.

பின்னர், தவெகவின் அமைச்சர் பட்டியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உத்தேச அமைச்சர் பட்டியல் விவகாரம் முற்றிலும் பொய்யான பிரச்சாரம். திமுகவினர் இது போன்று திட்டமிட்டு பரப்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT