முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | கோப்புப் படம்
மதுரை: “தமிழகத்தில் கடந்த 6 மாத ஆட்சியில் திட்டங்கள், அரசாணை, டெண்டர் ரத்து என ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியையும் ரத்து செய்யும் அரசாங்கத்தை தவெக நடத்தி வருகிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: “தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும் முந்தைய அரசு இறுதி செய்த ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய முடிவு எடுத்தது. பல திட்டங்களின் மதிப்பீடு தேவையின்றி மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கஜானாவுக்கு ஏற்படும் வீண் விரயத்தைத் தடுக்கவும் மறு ஆய்வு நடத்தப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஆட்சி மாற்றத்துக்கு சற்று முன்பு மிக குறுகிய கால அவகாசத்தில் வெளியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மைக்கு விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், சுமார் 2,993 டெண்டர்கள் என்பது பல முக்கியத் துறைகளுடைய பணிகள் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.
இப்போது மின்வாரியக் கொள்முதல், புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோக கட்டமைப்பு சார்ந்த அந்த ஒப்பந்தங்களும் மின் கொள்முதல் உட்பட்டவை ரத்து செய்யப்பட்டது. ரூ.20-க்கு வாங்கப்பட்ட ஒரு யூனிட் மின்சாரமும் தற்போது ரூ.41.50-க்கு 5 முறை டெண்டர் கொடுத்தாகிவிட்டது.
அதேபோல சென்னை மாநகரில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் மற்றும் ரூ.284 கோடி மதிப்பிலான நவீன நடைபாதைத் திட்டங்கள் முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் சுமார் 21 முக்கிய சாலை ஒப்பந்தங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வாகன ஓட்டிகளுக்கான சாலையோர ஓய்வு மையங்கள் அமைப்புத் திட்டங்கள் மற்றும் வெளிவட்டச் சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இதனால், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புதிய ஒப்பந்தங்கள் கோராமல் புதிய பணிகள் தொடங்காமல் புதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதன் காரணமாக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
உதாரணத்துக்கு தேர்தல் வாக்குறுதியில் பயிர்க்கடன் ரத்து. 5 ஏக்கர் இருந்தால் முழுமையாவும், 5 ஏக்கருக்கு மேல் இருந்தால் 50 சதவீதம் தள்ளுபடி செய்வோம் என கூறினர். இதற்கான அரசாணை 4 முறை திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
அரசுப் பணி தேர்வு எழுதுபவர்களுக்கு 5 வயது வந்து கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது அரசுப் பணிகள் அவுட்சோர்சிங் கொடுக்கப்பட்டுவிட்டன. அரசுப் பணியே இல்லை என்கிறபோது, அரசுப் பணி தேர்வு ஆணை எதற்கு?
ஆகவே, இந்த தவெக அரசு திட்டங்கள், அரசாணை, டெண்டர், ஒட்டு மொத்தத்தில் மக்களுடைய மகிழ்ச்சி ஆகியவற்றை ரத்து செய்யும் அரசாக இருந்து, தமிழகத்தை 6 மாதத்தில் 6 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்கிறது” என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.