வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகையில் அதிகாரிகள் சோதனை நடத்திய பூபாலன் வீடு | உள்படம்: பூபாலன் - வலது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: “தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, தவெகவில் மாவட்டத்துக்கு மாவட்டம் எத்தனை ‘போதை ஒளிப்பு’ ஆசாமிகள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும். ஏனெனில் தவெக Bad Party மட்டுமல்ல, Breaking Bad Partyயும் கூட” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்த நிலையில் தவெகவை மு.க.ஸ்டாலின் இவ்வாறு சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகளால் நாகை மாவட்டத் தவெக நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை ‘ஒழிப்பு’ பற்றி முதல்வர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை ‘ஒளிப்பு’ எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாஃபியாவை வைத்துக்கொண்டுதான் தவெக தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த வலைப்பின்னலையும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் தவெகவில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்." எனப் பதிவிட்டுள்ளார்.
பிரேக்கிங் பேட் என்பது போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பிரபல அமெரிக்க டிவி சீரிஸ். அதை சுட்டிக்காட்டியே ஸ்டாலின் தவெகவை விமர்சித்துள்ளார்.