சென்னை: “பாஜக எப்படி அமலாக்கத் துறையை விட்டு மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்களோ, அதேபோல தான் காவல் துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது” என்று திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து பரந்தாமன் அளித்துள்ள பேட்டியில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குதிரை பேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கபட்டுள்ளது. நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் மூலமாக, நீதிமன்றத்தால் விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது.
இது பொய் வழக்கு, இந்த வழக்கில் இவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டிய முகாந்தரம் இல்லை என்ற அடிப்படையில் நேற்றைக்கு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரை பேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாத தவெக அரசு, தினந்தோறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எந்த குற்றங்களை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருகிறது.
அந்த வகையிலதான் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஒரு அவதூறு வழக்கு. அவதூறு வழக்கு போடுவதில் கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது. முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்துக்காக அவசர அவசரமாக ஓடி வந்து அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறை கைது செய்வதனுடைய பின்னணி என்ன? எதற்கு ஓர் அவதூறு வழக்கில் கைது செய்தவரை 6 மணி நேரம் 7 மணி நேரம் காவல் துறை விசாரணை செய்தது? அது என்ன மர்மம்?
அந்த விசாரணையின்போது அனிதா ராதாகிருஷ்ணனை எம். எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள், தவெகவில் இணைய பணம் தருகிறோம்” என கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு. 6 மணி நேர விசாரணை இதற்காக தான் நடந்துள்ளதா?
பாஜக எப்படி அமலாக்கத் துறையை விட்டு மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்களோ, அதேபோல தான் காவல் துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது.
இந்த உண்மை வெளிப்பட்ட உடன் பதறிப்போய் நேற்று இரவு 9 மணிக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஒரு பேட்டி கொடுக்கிறார். பேட்டியில் முறையான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவர், தனி நபர் அவதூறு செய்கிறார், உடல் கேலி செய்கிறார்.
எங்கள் எம்.எல்.ஏ-வை ரவுடி என கூறுகிறார். இப்படி எல்லாம் சொல்லும் நிர்மல் குமார் மீது உக்கரபாண்டியன் என்பவர் உசிலம்பட்டியில் நில மோசடி என புகார் கொடுத்துள்ளார். இந்த 420 நிர்மல் குமார் வந்து திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ரவுடி என்றெல்லாம் சொல்ல எந்த அருகதையும் இல்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு மக்களை கொன்று குவித்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம், கொன்று குவித்தவர் என்று எங்க தலைவருடைய பெயரை சொல்றார். இது எந்த விதத்தில் நியாயம்? இப்படி அவதூறாகப் பேசக்கூடிய ஆதவ் அர்ஜுனாவை ஏன் கைது பண்ணாமல் காவல் துறை இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறது.
யாரை ரவுடின்னு சொல்றாரு நிர்மல் குமார். நிதித்துறை அமைச்சராக இருக்கிறாரே மரிய வில்சன் அவர் மீது வீடு புகுந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் அவரை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பட்டுள்ளது. அதேபோல ஒரு அமைச்சர் மேல பவுடர் குற்றச்சாட்டு இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மேல பாதிக்கபட்ட பெண் அளித்த குற்றச்சாட்டு இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் தலைமை அமைச்சராக இருக்கக்கூடிய விஜய் மீது குதிரை பேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறோம். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்டாக, குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிபட்ட தவெக அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை.
நேற்றைக்கு அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்னால் அமைச்சர் ஓஎஸ் மணியன், 'விஜயபாஸ்கர் அமைச்சர் பதிவி வாங்கிதருவதாக பேரம் பேசினார்' என கூறி இருக்கிறார். யார் இந்த குதிரை பேரத்தை செய்து கொண்டு உள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
திராவிட முன்னேற்ற கழகம் 59 இடங்களில் வென்று இருக்கிறது. ஒரு எம்எல்ஏ, இரண்டு எம்எல்ஏ வை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சி அமைக்க முடியும்? இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தவெக அமைச்சர்கள் எல்லாம் பேசுவது வடிகட்டிய பொய். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்த வேண்டிய நோக்கத்திற்காக மட்டுமே கூறப்படும் குற்றச்சாட்டு.
ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து, அரசு நிர்வாகத்தை கவனிக்க துப்பில்லை. நிர்வாகம் தேங்கி கிடக்கிறது. ஆட்சிக்கு வந்து 56 நாட்கள் ஆகின்றன. இதுவரை மக்களுக்காக என்ன வேலையை இந்த அரசு செய்துள்ளது?
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்க துப்பில்லை. அரசின் குறைகளை சமூக வலைதளத்தில் சுட்டிக்காட்டி செயலாற்றி கொண்டிருக்கக்கூடிய ஆர்ஜே.சரண் ஜெயராமன் போன்ற தம்பிகளை எல்லாம் பொய் காரணம் சொல்லி கைது செய்து கொண்டுள்ளனர். திமுக மீது அவதூறுகளை பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து , மேயர் பிரியா உள்ளிட்ட திமுக மகளிர் நிர்வாகிகளை கொச்சையாக பேசிவரும் தவெக ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?
மாற்றம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து அதிமுக கட்சியில் இருப்பவரை தவெக கட்சியில் சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளது. இன்னும் பலரை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தான் இந்த அரசு உள்ளது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு வரக்கூடிய திங்கட்கிழமையில் இருந்தாவது மக்கள் பணியில் ஈடுபடுங்கள்.
இந்தியாவுக்கு முன் மாதிரியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலின் மாண்பை சிதைத்து, ஒரு மோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது இந்த தவெக அரசு. ஓர் அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் தவெக” என்று பரந்தாமன் கூறினார்.