பெ.சண்முகம் | கோப்புப்படம் 
தமிழகம்

“மதுராந்தகத்தில் தவெக அதிகளவில் பணப்பட்டுவாடா” - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

வெற்றி மயிலோன்

சென்னை: “மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்தார்கள். நாங்கள் தூயசக்தி, வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால், இருப்பதிலேயே அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக தேர்தல் ஆணையம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பதை இரு தேர்தல் ஆணையர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எஸ்ஐஆர் நடவடிக்கை மூலமாக தேர்தல் ஆணையத்தின் வேலை என்பது, அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதும், அனைவரும் வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்துவதும், நேர்மையாக தேர்தலை நடத்துவதுமே ஆகும்.

ஆனால், வாக்குரிமையை பறிப்பது, வாக்களிக்கும் உரிமையை பறிப்பது, மோசடியாக ஆட்சியமைப்பதற்கு பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்வது எனும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இந்திய மக்களுக்கு ஞானேஷ் குமார் செய்துள்ளார். ஆகவே, அவர் ஒரு நிமிடம் கூட அவர் பதவியில் நீடிக்க அருகதை இல்லை. அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இதையே திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்படுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஞானேஷ் குமாரை நீக்கும் தீர்மானம் வரும்போது அதற்கு ஆதரவாக திமுக இருக்கும் என அறிவித்துள்ளார். திமுகவின் இந்த அறிவிப்பை இடதுசாரிகள் வரவேற்கிறோம்.

இது தொடர்பாக இண்டியா கூட்டணியின் அடுத்தகட்ட போராட்டங்களில் திமுக பங்கேற்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். வாக்குரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறேன்.

தவெக கூட்டணியில் பாமக இணைவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி ஆகியோர், இது வதந்தி எனக் கூறியுள்ளனர். எனவே நாங்களும் இதனை வதந்தி என்றே நம்புகிறோம். தவெக எந்த விஷயத்திலும் வெளிப்படைத் தன்மையோடு கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை. அதைப்போலவே பாமக விஷயத்திலும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

தாராபுரத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர், தான் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தேன் என சொல்கிறார். அப்படியானால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளுக்கு எல்லாம் ஆளும் கட்சி எதுவும் செய்யாது என்பதை முதல்வரை வைத்துக்கொண்டே அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

அவர் அனைத்து மக்களுக்குமான முதல்வர். அவர் யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். ‘ஆளும் கட்சியில் சேர்ந்தால் தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும்’ என தவெக வேட்பாளர் சொன்னதற்கு முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும். எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரத்தில் ஞானேஷ் குமார் எனும் தனிநபரை பொறுப்பாக்கக் கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் சொல்லியுள்ளது பொருத்தமானது அல்ல.

மதுராந்தகத்தில் நாங்கள் நேற்று நோட்டீஸ் மட்டும் வழங்கி வாக்கு கேட்டோம். ஆனால், “மற்றவர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள்; நீங்கள் நோட்டீஸ் மட்டும் கொடுக்கிறீர்கள்” என்று மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். அப்போது யார் யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் எனக் கேட்டோம். இருப்பதிலேயே அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

நாங்கள் தூயசக்தி, வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால் இருப்பதில் அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளது; அதனால் நீங்களும் கொஞ்சமாவது பணம் கொடுங்கள் என மக்கள் கேட்கிறார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT