புதுடெல்லி: தவெக அரசு மீதான குதிரை பேர முறைகேடு புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெறுவதற்காக மற்ற கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது குதிரை பேரம் நடந்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வெற்றி பெற்ற மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தீர்ப்புக்கு மாறாக, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்த 4 பேரும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.