தமிழகம்

காவிரி நீரை காலத்தோடு பெற தவெக அரசு சட்ட நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்துக்கான நீரை உரியகாலத்தில் பெற்றுத்தர தேவையான சட்ட நடவடிக்கைகளை தவெக அரசு எடுத்து வருகிறது என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களின் பிரதான நீர் ஆதாரமாக காவிரி நீர் உள்ளது. காவிரி நீரை பயன்படுத்துவதில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டிய பின்பும் காவிரி நீரை பெற ஆண்டு தோறும் போராட வேண்டிய நிலை இருக்கிறது.

உரிய நீருக்கு பதிலாக உபரி நீர் தான் தமிழகத்துக்கு கர்நாடக அரசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முயன்று வருகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், வேளாண் உற்பத்தியும் கடுமையாகப் பாதிப்படையும். இதைதடுத்து நிறுத்தவும், தமிழகத்துக் கான நீரை உரிய காலத்தில் பெற்றுத்தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.

கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், முல்லை பெரியாறு அணையில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கவும், பின்னர், மத்திய அரசிடம் வலியுறுத்தி, தென் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்கவும் அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும்.

ஏரி, குளங்கள் பராமரிப்பு திட்டம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைக் காலங்களில் வரும் நீரை சேமிக்கவும் ஏதுவாக ஏரி, குளங்கள் பராமரிப்பு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும்.

கடலுக்கு செல்லும் நீரை தடுக்க, மழைநீரை சேமிக்க, தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT