சென்னை: ‘மேகேதாட்டு விவகாரம் மட்டுமல்லாமல், தமிழகம் உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும், மக்கள் நலன்களும் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது’ என தவெக தெரிவித்துள்ளது.
இது குறித்து தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மேகேதாட்டு அணை விவகாரம் 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது திமுக தலைமை. அப்படியெனில், தூங்கிக் கொண்டிருப்பது யார் என்பதற்கு திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதல்வர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து மெத்தனமாக இருப்பது என்பதை திமுக தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது ஆக்டிவாக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை இன்-ஆக்டிவ் மோடுக்குத் தள்ளி இருக்க மாட்டார்களே. யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் திமுக பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். திமுகதான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகேதாட்டு விவகாரம் மட்டுமல்லாமல், தமிழகம் உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, தவெக அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது’ என்று தவெக தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பில், “பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், மேகேதாட்டு அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு, மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல் என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத தவெக அரசு.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி தவெக அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.