சிவகாசி: “ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் பட்டாசு தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது,” என சிவகாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ‘பட்டாசு தொழிலை நசுக்கும் தவெக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும்’ சிவகாசி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். மாநகர் திமுக செயலாளர் உதயசூரியன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்: பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் உலக அளவில் பக்களிப்பு அளித்து கொண்டிருப்பது சிவகாசி. அரசு பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டிய நிலையில், இந்த அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில் தொழிலை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுவது, சில நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக அல்ல, பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி வாழும் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆர்பாட்டம் செய்வதோடு நின்றுவிடாமல், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, திமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்துள்ளோம்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் விபத்துக்களை காரணம் காட்டி, பட்டாசு தொழிலை மொத்தமாக நசுக்குவது நியாயம் ஆகாது.
அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்போம். ஆனால் அதை காரணமாக வைத்து, உரிமம் பெற்று இயக்கும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் மொத்தமாக முடக்குவது நியாயம் ஆகாது.
சில்லறை பட்டாசு விற்பனை கடைகளில் கிப்ட் பாக்ஸ் வெடிகள் கூட வைத்திருக்க முடியாமல் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது இந்த அரசு. இந்த போக்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் சிவகாசி மாறிவிடும் என்றார்கள். ஆனால் இந்த 3 மாதங்களில் எந்த நன்மையும் செய்யவில்லை.
திமுக ஆட்சியில் தான் ரயில்வே மேம்பாலம், சுற்றுச்சாலை, சிவகாசி - விருதுநகர் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துதல், சிவகாசி மருத்துவமனை மேம்பாடு என அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் 3 மாதங்களில் தவெக அரசு இருக்கின்ற தொழிலையும் கெடுத்து உள்ளது.
சிவகாசியில் வெற்றி தொழில்துறை அமைச்சர் வந்தவுடன், ஒரு தொழிற்சாலைக்கு ஆம்புலன்ஸ், 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையம் இருக்கும், பட்டாசு தொழிலாளர்களுக்கு காப்பீடு என ரீல்ஸ் எடுத்து வெளியிட்டார். ஆனால் இந்த பட்ஜெட்டில் எந்த இடத்திலும் அதுபற்றிய அறிவிப்பு இல்லை.
தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 மாதத்தில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்துவிட்டோம் எனப் பிரச்சாரம் செய்யும் தொழில்துறை அமைச்சர், உங்கள் தொகுதியில் இருக்கும் பட்டாசு தொழிலை ஏன் நலிவடைய வைத்துள்ளீர்கள்.
உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீர் விடும் நிலையில், நீங்கள் தலைமைச் செயலக அறையில் அமர்ந்து கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்த்து ‘தமிழ்நாடு முன்னேறுகிறது’ என கூறுகிறீர்கள்.
அனைத்துத் துறைகளுக்கும் நிதியை குறைத்து உள்ளனர். ஓய்வூதிய நிதிக்கு திமுக அரசு ஒதுக்கிவைத்த ரூ.15 ஆயிரம் கோடியை இல்லாமல் ஆக்கிவிட்டனர். கல்வித்துறைக்கு ரூ.4 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. திமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, வெற்றி என ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள்.
தவெக அரசு கொண்டு வந்தது வெற்றி திட்டங்கள் அல்ல, அவை வெற்றுத் திட்டங்கள். நிதி நிலை அறிக்கை தான் தவெக அரசின் முதல் தோல்வி. 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பட்டாசு தொழிலைப் பாதுகாக்க அரசும், அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.