கோப்புப்படம்
திருப்பத்தூர்: “சாமானிய மக்களுக்காக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்றியோடு இருக்கிறது தவெக அரசு” என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் விலைவாசி உயர்வு கொடூரமான நிலையில் உள்ளது. சிவகங்கையில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வேலை கேட்டு, தனது குழந்தையுடன் சாலையில் உருண்டு போராடியுள்ளார். இது ஏன் இந்த ஆட்சியாளருக்கு புரியவில்லை?
வெற்றிப் பயணத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குமுறல்களை கொட்டி வருகின்றனர். இந்த அரசு மக்களுக்கு உதவாமல் விமானத்தில் பயணம் செய்வோருக்காக விமான எரிபொருள் வரியை ரத்து செய்துள்ளது. இந்த அரசு சாமானிய மக்களுக்காக இல்லாமல், பெரு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நன்றியோடு இருக்கிறது” என்று அவர் கூறினார்.