காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்

 
தமிழகம்

“தவெக அரசுக்கு நிர்வாக ரீதியான அனுபவம் இன்னும் வரவில்லை” - கார்த்தி சிதம்பரம் கருத்து

த.அசோக் குமார்

திருநெல்வேலி: “தவெக அரசு இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. பெரும்பாலானோர் முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளனர். இந்த அரசுக்கு நிர்வாக ரீதியான அனுபவம் இன்னும் வரவில்லை.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் எழுப்பிய பிரச்சினைகள், அதற்காக நடத்திய போராட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்குவதற்காக ‘டவுன் ஹால்’ என்ற தலைப்பில் மாநகரங்களில் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இன்று விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். திருச்சி வடக்கு முன்னாள் மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் வி.பி.துரை முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ராபர்ட் ப்ரூஸ், துரை வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, “இப்போது உள்ள 543 மக்களவைத் தொகுதியில் 181 தொகுதியை மகளிருக்கு இட ஒதுக்கீடாக வழங்கலாம். தமிழகத்தில் 39 தொகுதிகளில் 11 தொகுதிகளை மகளிருக்கு வழங்கலாம். இதற்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடும், தென்னகமும் வஞ்சிக்கப்படும். அதை நாங்கள் எல்லோரும் கண்டிக்கிறோம்.

சில மாநிலக் கட்சிகளுக்கு ஆசை காட்டி, அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதிகள் உயர்த்தப்படும் என்று கூறுகின்றனர். 543 பேர் உள்ள அவையிலேயே அனைவருக்கும் பேச நேரம் கிடைப்பதில்லை. 850 பேருக்கு மேல் அவையில் இருந்தால் அது பயனளிக்காது. கூடிக் கலையும் அவையாகவே இருக்கும். அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்தினால் வட இந்தியாவில் உள்ள வெறும் 5 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்றால் இந்தியாவை ஆட்சி செய்யப் போதுமானதாக இருக்கும். அதனால் இதை ஏற்க முடியாது.

இப்போது உள்ள தொகுதிகள் அப்படியே நீடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. சென்னைக்கு சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையம் தேவை. ஆனால் எந்த திட்டமாக இருந்தாலும் அந்தப் பகுதி மக்களின் ஒப்புதல் இல்லாமல் செய்தால் முட்டுக்கட்டையாகத்தான் அமையும். உள்ளூர் மக்கள் ஒப்புதல் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் கொண்டுவர முயன்றதால் அதில் தடங்கல் ஏற்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையம் போதுமான இடம் உள்ளதாக இல்லை. எனவே, புதிய விமான நிலையம் விரைவில் அமைக்க வேண்டும். அது எந்த இடம் என்பதில் பிரச்சினை இல்லை.

மத்திய அரசின் திட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு கொடுக்காவிட்டால் மாநிலங்களுக்கு நிதி பகிர்வை சரியாக வழங்காமல் மத்திய அரசு புறக்கணிக்கிறது. எப்சிஆர்ஏ சட்டத்தை நிறைவேற்றினால் சிறுபான்மை நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மற்ற நிறுவனங்களையும் முடக்குவதாக இருக்கும். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

பாஜகவின் அரசியலுக்கு சமுதாயத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. திமுக எந்தப் பக்கம் நிற்கப்போகிறது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களது தலைமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பு. அதேபோல் விஜய் பிரதமராக வேண்டும் என்று அந்தக் கட்சியினர் ஆசைப்படுவது குறித்து நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. பெரும்பான்மையாக வெற்றி பெறும் கூட்டணிக்கு தலைமை வகிப்பவர் பிரதமராவார். அந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல் காந்தி பிரதமராக இருப்பார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

உள்துறை அமைச்சரை தமிழக முதல்வர் சந்திப்பது அபூர்வமான நிகழ்வல்ல, ஆண்டுதோறும் நடப்பதுதான். இதனால் அரசியலில் மாற்றம் எதுவும் வரவில்லை. தற்போதைய மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை அப்படியே நீடிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் அதற்கு மாறாக தமிழக முதல்வர் பேசியிருந்தால் அதற்கு காரணம் உள்ளது.

இப்போதுதான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. பெரும்பாலானோர் முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளனர். தவெக அரசுக்கு நிர்வாக ரீதியான அனுபவம் இன்னும் வரவில்லை. இதை அரசு சரி செய்துகொள்ளும் என நினைக்கிறேன். போகப்போக இதை சரி செய்துகொள்வார்கள்.

தமிழக அரசுக்கு இப்போது போதுமான பெரும்பான்மை உள்ளது. இந்த அரசு பாதுகாப்பாக உள்ளது. எங்களைத் தவிர்த்து வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

யாரையும் ராஜினாமா செய்ய வைத்து, அதன் மூலம் இடைத்தேர்தலை உருவாக்கி, கட்சியில் சேர்ப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது தொகுதி மக்களுக்கு செய்யும் அநீதி. ஜனநாயகத்துக்கும் ஏற்றதல்ல. ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களுக்கு இடைத்தேர்தலில் சீட் கொடுக்கக் கூடாது.

காக்ரோச் ஜனதா கட்சி அரசியல் கட்சியாக வரவில்லை. அமைப்புரீதியாக செயல்படுகிறார்கள். போகப் போகத்தான் அவர்களது நிலைப்பாடு தெரியும். நாடாளுமன்றத்தை நடத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி அளிப்பதில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்வதற்கு அரசுதான் காரணம். பிரதமர் எத்தனை நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தக்கு வந்தார் ?. நாடாளுமன்றம் முறையாக நடக்காததற்கு அரசுதான் காரணம்” என்றார்.

SCROLL FOR NEXT