பெரம்பலூர்: “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும்” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
பெரம்பலூரில் பல்வேறு துறைகளின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, தாட்கோ, பள்ளிக்கல்வித் துறை, கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.4.48 கோடி மதிப்பிலான 13 கட்டிடங்களை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 161 பயனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. இதற்கு முந்தைய ஆட்சியில் நீக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தோம். அதன்படி திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்கள் இடஒதுக்கீடு திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தது. எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.
ஆனால் நாங்கள் வேண்டுமென்று சமூக நீதிதலைவர்களின் பெயர்களை நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுவரை பலரை மீட்டு கொண்டு வந்துள்ளோம். அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து தகவல்களை பரிமாறி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணிகளையும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள்.
மே மாதத்திற்குள் தவெக அரசு கவிழ்ந்து , மறு தேர்தல் நடைபெறும் என்று திமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். அவர்களின் கருத்தை கேட்கும்போது, “கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்” பாடல் நினைவுக்கு வருகிறது. இது தெரியாமல் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
பெரம்பலூர் சிலிண்டர் விபத்து ஒரு துயரச் சம்பவம். உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்களின் செலவை அரசே ஏற்கும்.
அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கான மாதவிடாய் விடுமுறை குறித்து நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற கருத்தை பரிசீலனை செய்யும்.
ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு பாரபட்சமின்றி விடுமுறை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல தமிழக அரசு இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறது. அந்த முடிவில் இருந்து தவெக பின்வாங்குவது இல்லை” என்றார்.