சென்னை: திமுக பாதையில் தவெக அரசு பயணிக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் விஜய் கவனத்துக்கு... திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களை அலட்சியப்படுத்தியதோடு, எதிர் கருத்துகளை முடக்கியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைதளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.
எதிர் கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.