தமிழகம்

பாஜகவின் மதமாற்ற தடைச் சட்ட அஜெண்டாவுக்கு துணைபோகிறதா தவெக அரசு? - திமுக சந்தேகம்

வெற்றி மயிலோன்

சென்னை: “இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் மதுரை கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூக நீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பின்னடைவாகும். இந்த வழக்கில் தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கை பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜகவின் ‘மதமாற்ற தடைச் சட்ட’ அஜெண்டாவுக்குத் துணைபோகிறதோ என்று பலமான சந்தேகம் எழுகிறது” என திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ.சுபேர்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூக நீதி வரலாற்றில், ஒருவரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே உரிமைகள் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன. கருணாநிதி இஸ்லாமியர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் அந்த போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான். ஆனால், இன்று தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளாலும், சட்ட ரீதியான அலட்சியத்தாலும் அந்த அடிப்படைத் தகர்க்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்துக்கு மதம் மாறிய நபர், பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கில், இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும் G.O.(Ms) No.31, BC, MBC and MW Department, dated 09.03.2024 -ஐ மதுரை கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூக நீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும். இந்தத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கையும் பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்குத் துணைபோகிறதோ என்று பலமான சந்தேகம் எழுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிக்கிள் 25 ஒரு குடிமகன் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் முழு சுதந்திரம் அளிக்கிறது. ஆனால், தற்போதைய தீர்ப்பில், “இஸ்லாமிற்கு மாறிய ஒருவர் வெறும் முஸ்லிம் மட்டுமே, அவருக்குப் பழைய சாதி அடையாளம் கிடையாது” (a convert to Islam is only a Muslim and that’s all there is to it) என்று இட ஒதுக்கீட்டை மறுத்திருப்பது தேன் தடவிய நஞ்சாகவே இருக்கிறது.

மதம் மாறுவதால் ஒருவரின் ஆன்மிக நம்பிக்கை மாறலாம்; ஆனால் அவர் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த சமூகப் புறக்கணிப்பும், கல்விப் பின்னடைவும் ஒரு நாளில் மறைந்துவிடாது. இந்த அடிப்படை உண்மையை நீதிமன்றத்தில் நிலைநிறுத்த தவெக அரசு தவறிவிட்டது. இந்தச் சட்டப் பின்னடைவு ஒரு அபாயகரமான அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகும்.

மேற்படி வழக்கின் விசாரணையில், ஒரு அரசாணையின் செல்லுபடித்தன்மை குறித்த கேள்வி எழும்போது, அதைத் தக்கவைக்கத் தேவையான வரலாற்றுத் தரவுகளையும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளையும் முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் கடமையிலிருந்து தவெக அரசு தவறியிருக்கிறது.

குறிப்பாக, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளுக்கு மாறாக மற்றொரு அமர்வு கருத்து தெரிவிக்கும்போது, சட்ட விதிகளின்படி இந்த வழக்கை ஒரு பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய அரசியல் பொறுப்பு தவெக அரசுக்கு இருந்தது. அதைச் செய்யாமல் மௌனம் காத்தது, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாஜகவின் பலிபீடத்தில் ஏற்றி வைப்பதற்குச் சமமாகும்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விலகிய பிறகும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் வாதங்களைக் கேட்காமல் அவசரகதியில் வழக்கை முடிக்க நீதிமன்றம் முற்பட்டபோது, இயற்கை நீதியைக் காக்க அரசுத் தரப்பு வலுவாக குரல் கொடுக்கவில்லை. “இஸ்லாத்தில் படிநிலைகள் இல்லை” என்ற தர்க்கத்தை முன்வைத்து, யதார்த்தத்தில் நிலவும் சமூக அடுக்குகளை நீதிமன்றம் மறுத்தபோது, அதைச் சட்ட ரீதியாக முறியடிக்க தவெக அரசிடம் எந்தக் கோட்பாட்டுத் தெளிவும் இல்லை.

2023-ம் ஆண்டு நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நீதிபதி சுவாமிநாதன் “அரசியலமைப்பு சட்டம் அப்படியே இருக்க வேண்டுமெனில், அது உருவாக்கப்ட்ட போது இருந்த மக்கட்தொகை விகிதம் அப்படியே பேணப்பட வேண்டும்” என்று பேசினார். அதற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ”நீதிபதிகள் இத்தகைய மனநிலையில் இருந்தால் அரசியல் சட்டத்தை பாதுகாக்க முடியாது” என்று விமர்சித்திருந்தார்.

இப்போது ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பின் விளைவாக, மதம் மாறினால் இட ஒதுக்கீடு பறிப்பு என்ற தண்டனை என்ற அச்சுறுத்தலின் மூலம், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் பாஜகவின் மறைமுக மதமாற்ற தடைச்சட்டத் திட்டத்திற்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது என்பது தெளிவாகிறது.

அந்த அஜெண்டாக்களுக்கு இணக்கமான முதல்வரின் அரசு, இணக்கமான சட்டத்துறை அமைச்சர் என தவெக அரசு பாஜகவுடன் பேணும் இணக்கம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘கட்டாய மதமாற்ற தடைசட்டம்’ என்ற வகுப்புவாத சட்டத்தை கொண்டு வந்த போது, திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில் நின்று போராடி அந்த சட்டத்தை முறியடித்தது.

தற்போது வந்திருக்கிற நெருக்கடியிலும், திராவிட முன்னேற்ற கழகம், கருணாநிதியின் வழி நின்று நம் உரிமைகளை தாரை வார்க்கும் தவெக அரசின் கள்ளத்தனமான கூட்டணியை அம்பலப்படுத்தி, சமூகநீதியை நிலைநாட்டி. உரிமைகளை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT