தமிழகம்

தவெகவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்து: விசில் சின்னத்தையும் உறுதி செய்தது தேர்தல் ஆணையம்

செய்திப்பிரிவு

சென்னை: கட்சி தொடங்கி இரண்​டரை ஆண்​டு​களில் தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு அங்​கீகரிக்​கப்​பட்ட மாநில கட்​சி​யாக அந்​தஸ்து வழங்​கி​யுள்​ளதுடன், விசில் சின்​னத்​தை​யும் உறுதி செய்து இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

முதல்வர் விஜய் 2024-ம் ஆண்டு பிப்​.2-ம் தேதி ‘தமிழக வெற்​றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்​சி​யைத் தொடங்​கி​னார். அதைத்​தொடர்ந்​து, சட்​டப்​பேரவை தேர்​தலில் விசில் சின்​னத்​தில் தனித்து போட்​டி​யிட்​டு, 108 இடங்​களைக் கைப்​பற்​றி​னார். பின்​னர், காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகள் ஆதர​வோடு முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​றார்.

இந்​நிலை​யில், இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட மாநில கட்சி என்ற அந்​தஸ்தை தவெக பெற்​றுள்​ளது. பொது​வாக மாநிலக் கட்​சி​யாக அங்​கீ​காரம் பெற, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் குறைந்​தது 6 சதவீத ஓட்​டு​களு​டன் 2 எம்​எல்​ஏக்​களைப் பெற வேண்​டும். இல்​லை​யெனில், மக்​கள​வைத் தேர்​தலில் 6 சதவீத ஓட்​டுகளு​டன் ஒரு தொகு​தி​யா​வது வென்​றிருக்க வேண்​டும். அல்​லது வெற்றி பெறா​விட்​டாலும் 8 சதவீத வாக்​கு​களைப் பெற்​றிருக்க வேண்​டும்.

தமிழக வெற்​றிக் கழகம் சந்​தித்த முதல் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலேயே 35.02 சதவீதத்​துடன் 1.8 கோடி வாக்​குகளைப் பெற்று ஆட்​சி​யமைத்துள்​ள​தால், மாநில அந்​தஸ்தை இந்​திய தேர்​தல் ஆணை​யம் வழங்கி உள்​ளது. அதே​போல், தவெக​வுக்​கான சின்​னம் ‘விசில்’ என்​ப​தை​யும் இந்​திய தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்​துள்​ளது.

தற்​போது, தமிழகத்​தில் திமுக, அதி​முக, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, விடு​தலை சிறுத்​தைகள், நாம் தமிழர், தேமு​திக ஆகிய 6 கட்​சிகளுக்கு அங்​கீகரிக்​கப்​பட்ட மாநில கட்சி என்ற அங்​கீ​காரம் உள்​ளது. அந்த வரிசை​யில் தற்​போது தவெக, 7-வது கட்​சி​யாக உரு​வெடுத்​துள்​ளது.

முதல்வர் விஜய் அறிக்கை: தவெக அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்ள நிலை​யில் முதல்வர் விஜய் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முப்​ப​தாண்​டு​களுக்​கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்​கி, வாழ்​வில் கிடைத்​தற்​கரிய ஓர் உயரிய இடத்​தைப்

பேரன்​புடன் தந்​து, ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் ஒரு​வ​னாக, உறவாக, மகனாக, அண்​ண​னாக,தம்​பி​யாக ஒவ்​வோர் இல்​லத்​தி​லும் உள்​ளத்​தி​லும் ஒரு நிரந்தர இடத்தை வழங்​கி, தாயன்​புடன் தாங்கி வரு​கின்​றீர்​கள். தமிழக மக்​களுக்கும் உலகத் தமிழ் உறவு​களுக்கும் என் நன்​றியை எப்​படித் திருப்​பிச் செலுத்​து​வது என்று யோசித்​தேன்.

அதன் வெளிப்​பா​டாகவே, உங்​களுக்கு நன்​றிக்​கடன் செலுத்​தவே 2024-ம் ஆண்டு தமிழக வெற்​றிக் கழகத்​தைத் தொடங்​கினேன். தமிழக அரசி​யல் வரலாற்​றில் எவருக்​கும் கிடைத்​தி​ராத ஒரு பேர​திச​யத்​தை, கடந்த சட்​டமன்​றத் தேர்​தலில் நிகழ்த்​திக் காட்​டினீர்​கள். 35 சதவீத வாக்​கு​களு​டன் தனிப்​பெரும் கட்​சி​யாகத் தவெக-வை உயர்த்​திப் பிடித்​தீர்​கள்.

உங்​கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்​தி​களின் ஆதர​வுடன் தமிழக மக்​களின் முதல்​வ​ராக உங்​கள் விஜய் உள்​ளேன். இந்​தி​யத்தேர்​தல் ஆணை​யம் உங்​கள் தமிழக வெற்​றிக் கழகத்​தை, தமிழகம் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தில் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சி​யாக அறி​வித்​துள்​ளது.

ஜனநாயகப் புரட்​சியை சத்​தமில்​லாமல் நிகழ்த்​திய உங்​கள் விசில் சின்​னத்​தை​யும் த.வெ.க.​வின் சின்​ன​மாக அங்​கீகரித்​துள்​ளது என்​பதை மகிழ்​வுடன் தெரி​வித்​துக்​கொள்​கிறோம். மதச்​சார்​பற்ற சமூக நீதிக் கொள்​கை​யுடன் நம்மை நம்​பு​கிற ஒட்​டுமொத்த மக்​களுக்​கான நன்​றிக்​கடன் பணி என்​றென்​றும் தொடரும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT