தமிழகம்

ராமேசுவரத்தில் தவெக பிரமுகர் தற்கொலை: மாவட்டச் செயலாளர் மீது இறந்தவரின் மனைவி புகார்

எம்.முகம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் வார்டு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் மனமுடைந்த தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். தனது கணவரின் இறப்புக்கு மாவட்ட தவெக செயலாளர் தான் காரணம், என இறந்தவரின் மனைவி தேவகி புகார் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பரந்தாமன் (38). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தார்.

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியதும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். தேர்தலின் போது தவெக வேட்பாளருக்காகத் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ராமேசுவரம் 10-வது வார்டு செயலாளராக பரந்தாமன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குப் முன்னர் பரந்தாமன் வார்டு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு ஒருவருக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பரந்தாமன், செவ்வாய்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ராமேசுவரம் நிலைய போலீஸார் பரந்தாமனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இது குறித்து பரந்தாமனின் மனைவி செய்தியாளர்களிடம், “எனது கணவர் ஆரம்பத்திலிருந்தே தவெகவின் உறுப்பினராக இருந்து விஜய்க்காக உழைத்து வந்தார். தேர்தலின்போது இரவு பகல் பாராமல் கட்சி வேட்பாளருக்காக உழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து எனது கணவருக்கு ராமேசுவரம் 10வது வார்டு செயலாளர் பதவி கிடைத்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், எனது கணவரை ராமேசுவரம் 10வது வார்டு செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, வேறு ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா அப்பதவியைக் கொடுத்துள்ளார். இது குறித்து கேட்கச் சென்ற எனது கணவரை மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலாவும், அவரது கணவரும் சேர்ந்து தரக்குறைவாக ஓருமையில் பேசியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த எனது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனது கணவரின் இறப்புக்குக் காரணமான மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT