தமிழகம்

சோத்துப்பாறை அணையை அத்துமீறி திறந்த தவெக நிர்வாகிகள் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவு

என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க எவ்வித அரசாணையும் வராத நிலையில், தவெக நிர்வாகிகள் சிலர் பாசன மடையைத் திறந்து நீரை வெளியேற்றி உள்ளனர். இதனை ரீல்ஸ்களாக சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். தவெக நிர்வாகிகளின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கிமீ. தொலைவில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. பெரியகுளம் மட்டுமல்லாது தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. இதன்மூலம் 2 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்.15-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ததால் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து கடந்த மாதம் 23-ம் தேதி நிரம்பி வழியத்தொடங்கியது.

இந்த உபரிநீர் அணையில் இருந்து ஒரு கி.மீ. தூரம் உள்ள அத்திமுருகு எனும் இடத்தில் உள்ள மதகை சென்றடைகிறது. பின்பு அங்கிருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பிரிந்து செல்லும் வகையில் மடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க இன்னமும் அரசாணை வெளியிடவில்லை.

இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு சோத்துப்பாறை அணையில் இருந்து வரும் நீரின் மடையைத் திறந்து மலர்தூவி புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

பாசனத்துக்கு நீர் திறப்பதாக விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்தினருக்கும் எந்தவித முன் அறிவிப்பும் விடப்படாத நிலையில், தவெக நிர்வாகிகள் நீர் திறந்து விட்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு விவசாயிகளிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பெரியகுளம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அன்பரசனிடம் கேட்டபோது, “சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் தற்போது அணையில் இருந்து வெளியேறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், பாசனத்துக்கு என்று தனியாக இன்னமும் நீர் திறக்கவில்லை.

மழை குறைந்து இந்த உபரிநீர் வெளியேறாவிட்டால் மடைக்கு நீர் செல்லாது. ஆகவே, முறைப்படி அரசாணை பெற்ற பிறகு உரிய அளவு நீர் திறக்கப்படும். அத்துமீறி மடை நீரைத் திறந்து விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சோத்துப்பாறை அணையை தவெக நிர்வாகிகள் அத்துமீறி திறந்துவிட்ட செயலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், பாஜகவின் வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT