நிர்மல்குமார் | கோப்புப் படம்
திருச்சி: நீட் தேர்வை எதிர்ப்பதில் தவெக உறுதியாக இருக்கிறது என தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நீட் தேர்வு தொடர்பான மாணவர் போராட்டங்களில் திமுக தேவையற்ற அரசியல் செய்கிறது. சிலரை ரூ.100, ரூ.200 பணம் கொடுத்து திமுக டி-ஷர்ட் அணிவித்து போராட்டத்தில் அமர வைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்.
“ஜென் ஸி” என்ற வார்த்தையை சரியாக புரிந்துகொள்ளாமல் உதயநிதி பேச்சு உள்ளது. மாணவர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டங்களை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. நீட் தேர்வை எதிர்ப்பதில் தவெக உறுதியாக இருக்கிறது.
மாணவர் போராட்டங்களில் தவெகவினர் பங்கேற்றாலும் கட்சிக் கொடி, பேனர், அரசியல் அடையாளங்களைப் பயன்படுத்தவில்லை. மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக மக்கள், விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறோம். அதேபோன்று சட்டவல்லுநர்களிடமும் ஆலோசித்து வருகிறோம். எனவே, நல்லமுடிவை முதல்வர் எடுப்பார்.
தமிழக முதல்வர் கர்நாடகம் செல்வது தொடர்பான முடிவை முதல்வர் அலுவலகமே அறிவிக்கும். இதை பேச்சுவார்த்தை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளலாம். அதேநேரத்தில், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கும், முன்னாள் துணை முதல்வர் உதயநிதிக்கும் முழுமையான புரிதல் இல்லை.
பல்வேறு தடைகளை கடந்து ஜனநாயகன் திரைப்படம் வெளியானது, உணர்வுப்பூர்வமான தருணமாக மாறியதால் அந்தப் படம் பார்த்த சில அமைச்சர்கள் கண்கலங்கியது இயல்பானதுதான்.
நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.