சென்னை: தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி எப்படி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், தேர்தல் சமயங்களில் திமுகவினர் அவர்களை எதிர்க்கும் பெண்களை மையப்படுத்தி விமர்சித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் பெண்களை அவதூறாக பேசிய நிலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தாராபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தவெக பெண் வேட்பாளர் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்யும் வகையில் விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் உருவக்கேலி செய்தார்கள். அதனையெல்லாம் கடந்து 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் தலைவியாக அவர் வெற்றி பெற்றார்.
பெண்கள் மீதான திமுகவின் உடல்ரீதியான தாக்குதல்கள், கொச்சையான பேச்சுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எனவே, இவ்விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது விரைவில் கிரிமினல் புகார் கொடுக்க உள்ளோம். தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை அளித்துள்ளோம். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்: எங்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். அதனை விடுத்து திமுகவினர் பொய் பிரச்சாரங்களையும், கட்டுக்கதைகளையும் பேசி வருகின்றனர். ஒரு பெண் வேட்பாளரை கொச்சையாக பேசியதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்படசில தலைவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின் றனர். தற்போது வரை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
டிஜிபியிடம் புகார்: இதற்கிடையே, தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது தவெக வழக்கறிஞர் அணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.