தூத்துக்குடி: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தவெகநேற்று புகார் மனு அளித்தது.
தூத்துக்குடியில் கடந்த 8-ம் தேதி மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியது: விசுவாசம் என்றால் என்ன தெரியுமா, கொடி பறக்கும்போது கைதட்டுவது அல்ல. அந்தக் கொடி பறப்பதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அந்தக் கையை எடுத்துவிட்டு கொடியை பறக்க விடுவதுதான் விசுவாசம்.
அதிமுகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க,அழிக்க நினைக்கிறான். அதிமுகவை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது தண்ணியாவது, எங்க அண்ணி திரிஷாவைப் பற்றி யார் பேசியது என்று தவெகவினர் கேட்கிறார்கள். இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உதயகுமாருக்கு எதிராக தூத்துக்குடி புறநகர் மாவட்ட தவெக பொருளாளர் அருண்குமார் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். இது தவெக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவதூறு கருத்துகளை அவர் தெரிவிக்காத வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.