அண்மையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், நட்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய தகுதியை தங்கள் கட்சி பெற்றிருப்பதாக உறுதியோடு தெரிவித்தார். தமிழகத்தை ஆண்டு அனுபவம் கண்ட திமுக, அதிமுக கட்சிகளே கூட்டணிக்காக அலைபாயும் நிலையில் தனித்தே வெற்றிபெறுவோம் என்று விஜய் பேசுவது மிகவும் அசாத்தியமான நம்பிக்கையாகவே கருதப்படுகிறது.
அதே கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாட்டில் உள்ள 2.25 கோடி இல்லங்களில் இருந்தும் குறைந்தது ஒரு ஓட்டு தவெக-வுக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளே 2.09 கோடி தான். அந்த வகையில் இப்போதே நாம் திமுக-வை தாண்டிவிட்டோம்” என்றார். கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன், “வெளிநாட்டில் வசிக்கும் 3 லட்சத்திற்கு மேற்பட்டதமிழர்கள், தேர்தல் வந்தால் தமிழ் நாட்டுக்கு வந்து தவெக-வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பார்த்தால் சுமார் 5.43 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். முதலில் தங்களுக்கு 23 சதவீத வாக்குகள் இருப்பதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, பிற்பாடு பொதுக்குழுவில், 26 சதவீதம் இருப்பதாக தெரிவித்தார். செங்கோட்டையன் 34 சதவீதம் என்று கூட்டிச் சொன்னார். இந்த நிலையில், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமாரும் ஆதவ் அர்ஜுனாவும் தவெக-வுக்கு 2 கோடிக்கும் அதிகமான வாக்குகள் இருப்பதாக இப்போது பேசி இருக்கிறார்கள்.
கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக மட்டும் பெற்ற வாக்குகள் 1.74 கோடி. அதிமுக பெற்ற வாக்குகள் 1.53 கோடி. அந்த தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக பெற்ற வாக்குகள் 2.09 கோடி. 2024 மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்ட திமுக பெற்ற வாக்குகள் சுமார் 1 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரம். கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் சுமார் 2 கோடிக்கும் அதிகமான வாக்குகள் வரலாம்.
அதேசமயம் அந்தத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் சுமார் 1 கோடியே 55 ஆயிரம் வாக்குகளை அதிமுக பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளைச் சேர்த்தால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சுமார் ஒன்றரை கோடி வாக்குகள் கிடைத்திருப்பதாகக் கருதலாம். அந்தத் தேர்தலில் நாதக-வுக்கு சுமார் 32 லட்சம் வாக்குகள் கிடைத்தன. ஆக, எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் இதுவரை எந்தக் கட்சியும் தனித்து 2 கோடி வாக்குகளை பெற்றதில்லை.
இந்நிலையில், கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக ஆகியவை பெற்ற வாக்குகளை எல்லாம் கூட்டினால் சுமார் நான்கு கோடி வாக்குகள் வருகிறது. எஞ்சியிருக்கும் சுமார் 1 கோடியே 43 லட்சம் வாக்குகளில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு போகும் என்று தெரியாத நிலையில் தவெக தலைவர்கள் தங்களுக்கு 2.25 கோடி வாக்குகள் இருப்பதாக எப்படி நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தக் கணிப்பு சரியாகவே இருந்து அக்கட்சி 2 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுமானால் அது தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாகத்தான் இருக்கும்.