தேநீர் தயாரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகன்.
சென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.பாலமுருகன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கையாண்டு வரும் எளிமையான மற்றும் நூதன பிரச்சார முறைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
வேட்புமனுத் தாக்கலை முடித்த கையோடு களத்தில் இறங்கியுள்ள பாலமுருகன், தினமும் காலை நேரங்களில் தொகுதியிலுள்ள முக்கியப் பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நேற்று தாங்கல் பூங்கா, புதூர் மீன் சந்தை, மாதனாங்குப்பம் மற்றும் கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வீடு வீடாகச் சென்று ‘விசில்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கள்ளிக்குப்பம் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த ஒரு டீக்கடைக்குச் சென்ற வேட்பாளர் பாலமுருகன், யாரும் எதிர்பாராத விதமாகத்தானே முன்வந்து டீ ஆற்றத் தொடங்கினார்.
கடையில் இருந்த வாடிக்கையாளர்களிடம் சிரித்த முகத்துடன் பேச்சு கொடுத்தபடியே, அவர்களுக்கு டீ விநியோகம் செய்த அவரது செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மக்களோடு மக்களாக கலந்து, எளிமையான முறையில் அவர் மேற்கொண்டு வரும் இந்த அணுகுமுறை, அம்பத்தூர் தேர்தல் களத்தில் பேசும் பொருளாகியுள்ளது.