வெள்ளகோவிலில் நேற்று செங்கோட்டையனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெகவினர்.
திருப்பூர்: தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் நிர்வாகி அஜிதா விஜய் காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதுடன், தற்கொலைக்கும் முயன்றார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் தவெக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அலுவலகத்தை திறந்துவைக்க வந்தபோது, கட்சியினர் சிலர் அவரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில் பகுதிக்கு ஈரோடு, தாராபுரத்தைச் சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமித்ததாகவும், கட்சி மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர்களுக்கு, பதவி வழங்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
செங்கோட்டையன் காரை செல்ல விடாமல் தடுத்த கட்சியினர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த செங்கோட்டையன் “அனைவரும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு பேசி, பிரச்சினைக்குத் தீர்வுகாண்போம்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார். இந்நிலையில், செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள் முற்றுகையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.