தமிழகம்

8 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த மதுரைக்கு ஒரு அமைச்சர்தானா? - தவெக தொண்டர்கள் சோர்வு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காலம், காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அதிமுக, திமுகவின் முக்கிய விஐபி வேட்பாளர் களைத் தோற்கடித்தோருக்கு தவெகவில் அமைச்சர் பதவி வழங்காதது எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் யாரும் எதிர் பார்க்காத வகையில் தவெக 8 தொகுதிகளில் வென்றது.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் போன்ற முக்கிய வேட்பாளர்கள் உட்பட இக்கட்சி களைச் சேர்ந்த்தவர்களை தவெக வேட்பாளர்கள் தோற்கடித்து முதன்முறையாக எம்எல்ஏ ஆகினர்.

மதுரை மாவட்டத்தைவிட குறைவான தொகுதிகளில் வென்ற மற்ற மாவட்டங்களில் இரண்டு தவெக எம்எல்ஏ-க்கள், மூன்று தவெக எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகி உள்ளனர். அதேநேரம் அதிமுக, திமுக மிக செல்வாக்குடன் இருந்த மதுரை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் தவெக வென்றும் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்தும் வழங்கப் படாததால், அக்கட்சியினர் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தவெகவினர் கூறியதாவது: மாவட்டத்தில் சிடிஆர்.நிர்மல்குமார் (தவெக), விஸ்வநாதன் (காங்கிரஸ்) ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும் இருவருமே சென்னையில் வசிக்கக் கூடியவர்கள். நிர்மல்குமார் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரும்பாலும் சென்னையில்தான் இருப்பார்.

உள்ளூரைச் சேர்ந்த விஜய் ரசிகராக இருந்து, அவரது மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் பணியாற்றி வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் சிலர் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தைவிட குறைவான தொகுதிகளைக் கொண்ட தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை மாவட்டத்தில் 8 தொகுதிகளைக் கைப்பற்றியும், தவெகவில் ஒருவர் மட்டுமே அமைச்சராக்கப்பட்டுள்ளார். மற்றொரு அமைச்சர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

இக்கட்சி அமைச்சரவையில் இடம் பெறாமல் இருந்திருந்தால் மேலும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். மதுரை மாவட்டத்துக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்காததற்கு தவெகவின் உட்கட்சி பூசலும், மற்றவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் தவெக-வைச் சேர்ந்த மேல்மட்ட அதிகாரப் புள்ளிகள் பார்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 10 தொகுதிகள் கொண்ட மதுரை மாவட்டத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததால் அக்கட்சியினரிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களில் மதுரைக்கு முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

SCROLL FOR NEXT