வேலூர்: திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக வேட்பாளரின் மகன் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனு ஏற்கப்பட்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட சின்னம் ஒதுக்கியுள்ளதால் தேர்தல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட இருந்தவர் டாக்டர் திருப்பதி. அவருக்கு, தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதில் உட்கட்சி பூசல் இருந்தது. ஆனால், தனக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்ததால் தேர்தல் பணிகளை டாக்டர் திருப்பதி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார்.
தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் திருப்பத்தூர் தொகுதி அமமுகவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த தகவல் திருப்பத்தூர் அதிமுகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், டாக்டர் திருப்பதியின் ஆதரவாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘அதிமுகவில் நமக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் தவெகவில் இணைந்து போட்டியிடலாம்’ என்றும் முடிவு செய்தனர்.
இதற்கிடையில், திருப்பத்தூர் தொகுதியை மாற்றி கொடுக்க முடியாது என்பதில் அதிமுக தலைமை உறுதியாக இருந்ததால் டாக்டர் திருப்பதி தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததுடன், திருப்பத்தூர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். கட்சியில் சேர்ந்த உடனே வேட்பாளர் வாய்ப்பையும் பெற்றதால் திருப்பத்தூர் தொகுதி தவெகவில் ஒரு பக்கம் குமுறல் இருந்தது. ஆனால், டாக்டர் திருப்பதி பலமான வேட்பாளர் என்பதுடன், பிரச்சார வேலைகளை துரிதமாக எடுத்ததால் பிரச்சார களத்தில் அதிமுகவுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறார்.
தந்தைக்கு மகன் டம்மி
திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக வேட்பாளராக டாக்டர் திருப்பதி மனு தாக்கல் செய்தார். அவருக்கு, மாற்று வேட்பாளராக (டம்மி) திருப்பதியின் மகன் டி.ஜி.கோவிந்த் மனு தாக்கல் செய்தார். இருவரது மனுக்களிலும் தவெக சார்பில் போட்டியிடுவதாக குறிப்பிட்டிருந்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப். 7-ம் தேதி நடைபெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதும், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் டாக்டர் திருப்பதியின் மனுவும், அவரது மகன் டி.ஜி.கோவிந்த் மனுவும் ஏற்கப்பட்டது.
இதையடுத்து, ஏப்.9-ம் தேதி (நேற்று முன்தினம்) மனுக்கள் திரும்பப்பெற கடைசி நாள் என்பதுடன், வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அன்றைய தினம் டம்மி வேட்பாளரான டி.ஜி.கோவிந்த் மனுவை திருப்பதி தரப்பில் திரும்பப்பெறவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, டாக்டர் திருப்பதிக்கு தவெகவின் அதிகாரப்பூர்வ சின்னம் ஒதுக்கீட்டுக்கான கடிதம் கொடுத்ததால் அவருக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. தவெக வேட்பாளர் என குறிப்பிட்ட நிலையில், டி.ஜி.கோவிந்த் தனது மனுவை திரும்பப் பெறாததால் சுயேட்சை வேட்பாளராக கருதி அவருக்கு பகடை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 திருப்பதி வேட்பாளர்கள்
தவெக வேட்பாளர் திருப்பதி பெயரை வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த 3 சுயேட்சை வேட்பாளர்கள் திருப்பதி பெயரிலேயே போட்டியிடுகின்றனர். சி.திருப்பதி என்பவருக்கு கைவண்டி சின்னமும், சு.திருப்பதிக்கு சாலை உருளை சின்னமும், ந.திருப்பதிக்கு வாளி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதோடு, டாக்டர் திருப்பதியின் மகனும் சுயேட்சையாக களத்தில் இருப்பதால் தேர்தலில் தேவையில்லாமல் வாக்குகள் சிதறடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பு மனுவை திரும்பப் பெறாமல் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியதன் காரணம் குறித்து தெரிந்துகொள்ள டி.ஜி.கோவிந்த், தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை.