அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசன் | ஐயுஎம்எல் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா
சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தவெக, அதிமுக, ஐயுஎம்எல் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கோவிந்தராசன் பேசும்போது, “சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.
தவெக உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பேசுகையில், “இன்றைய விலைவாசி அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்.
புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் 500 சதுர அடியில் அலுவலகம் அமைக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சையது பாரூக் பாஷா பேசுகையில், “சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.