செங்கோட்டையன் | கோப்புப் படம். 
தமிழகம்

“பொங்கலுக்கு முன் தவெக கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் இணைவர்” - செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

தவெக கூட்டணியில் ஓபிஎஸ்., தினகரன் உள்ளிட்டோர் பொங்கலுக்கு முன்னர் இணைவதை எதிர்பார்க்கலாம் என்று தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில், தவெகவில் இணைந்தவர்களை, அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டை

யன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. அந்த படம் வெளியான பின்னர், நிறைய கட்சிகள் முடங்கிப் போகும். அதிமுகவில் 50 ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்து, கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தேன். என்னை சாதாரணமாக தூக்கி எறிந்து விட்டார்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது.

நம்மை ஏமாற்றுவதற்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், ஏமாறப்போவது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தான். எல்லோரும் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் பயந்து கொண்டு உள்ளது. இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய தலைவராக விஜய் உருவெடுப்பார். விஜய் கோட்டையில் அமர்வதை தடுக்க முடியாது’’ என்றார்.

பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தவெக வெற்றி வாகை சூடும். விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் மலேசியாவில் மாபெரும் கூட்டம் கூடியது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் தவெக தலைவர் விஜய்க்கு பெருமளவில் கூட்டம் கூடுகிறது. பொங்கலுக்குள் அனைத்து நிகழ்வுகளும் நடக்கும், தவெகவில் பலர் இணைய உள்ளனர். தவெக மதம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், உள்ளிட்டோர் தவெக கூட்டணியில் இணைவதை விரைவில் எதிர்பார்க்கலாம். இது பொங்கலுக்கு முன்னரே நடைபெறும் என்றார்.

SCROLL FOR NEXT