தமிழகம்

“எந்த கூட்டணியானாலும் ஆண்டிபட்டி எங்களுக்கு!” - துண்டுபோட்ட டிடிவி

என்.கணேஷ்ராஜ்

“நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

எம்ஜிஆரின் 38-வது நினைவு நாளையொட்டி, ஆண்டிபட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த டிடிவி.தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி தொடர்பாக ஊடகங்கள் வதந்தியை பரப்புவது வருத்தமளிக்கிறது. முன்பிருந்ததை விட அமமுக-வுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது. கட்டமைப்பு வலுப் பெற்றிருக்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற முயற்சியில் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்துக்கு எது நல்லதோ அந்த முடிவை எடுப்போம். அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது. எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுக தான்; ஊடகங்கள் அல்ல.

எங்களை ஏற்றுக் கொள்பவர்களை விட, நாங்கள் யாரை ஏற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம். எங்களுக்கு உரிய மரியாதை மற்றும் கேட்கும் தொகுதிகளை தருபவர்கள் உடன்தான் கூட்டணி. தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி முடிவுகளை அறிவிப்போம். வரும் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி. எங்களுக்கு புனித பூமியாக திகழ்வது ஆண்டிபட்டிதான். ஆகவே, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். வேட்பாளர் யார் என்பதை பிறகு அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT