சென்னை: “அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக் குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதல்வர் விஜய் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும்.
எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்துக்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.