டிடிவி தினகரன் | கோப்புப்படம் 
தமிழகம்

“பெண்களை தவெகவினரிடம் பாதுகாக்கவே மேலும் ஓர் அதிரடிப்படை தேவை” - தினகரன் விமர்சனம்

தமிழினி

சென்னை: “பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின்தொடர்ந்து சென்று ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்களே பிடித்து நையப்புடைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்கு மேடை வீர வசனம் பேசும் முதல்வர் விஜய், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார்?

பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா?

தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதல்வர் விஜய், தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக் கேடானது.

எனவே, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே அடுத்து அந்தக் குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதோடு, இனியாவது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT