சென்னை: ‘தவெகவுக்கு தன்னிச்சையாக ஆதரவளித்துள்ள அமமுகவின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டப்பேரவையில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.
எஸ்.காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆகவே, கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், எஸ்.காமராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.