டிடிவி தினகரன்

 

கோப்புப் படம்

தமிழகம்

“கடும் குற்றச்சாட்டுக்கு ஆளான தவெக எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசா?” - முதல்வர் விஜய் மீது தினகரன் சாடல்

வெற்றி மயிலோன்

சென்னை: “கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேரவை துணைத் தலைவர், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆகியோர் மீது முறையான முதற்கட்ட விசாரணைகூட மேற்கொள்ளாமல், அவர்களுக்கும் தீபாவளி பரிசு அளித்து மகிழ்வதற்கு முதல்வர் விஜய் வெட்கி தலைகுனிய வேண்டும்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் பிரச்சினைக்காக மனு அளிக்க வந்தவரை கண்மூடித்தனமாக அடித்து விரட்டியது, அவரது குடும்பத்தையே கொன்றுவிடுவேன் என மிரட்டியது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தவெக பெண் நிர்வாகி அளித்த புகார் என ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில் அதுகுறித்து இதுவரை முறையான முதற்கட்ட விசாரணைகூட மேற்கொள்ளாமல், அவர்களுக்கும் தீபாவளி பரிசு அளித்து மகிழ்வதற்கு முதல்வர் விஜய் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என வீராப்புப் பேசிய முதல்வர் விஜய், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது மட்டும் மவுனம் காப்பது "தனக்கு என்றால் புளிப்பு, பிறருக்கு என்றால் இனிப்பு" என்ற பழமொழிக்கு ஏற்ப இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுகிறாரா?

தேர்தலின்போது 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர், 'உங்கள் பையன், உங்கள் தம்பி, உங்கள் அண்ணன் இந்த விஜய் தான்' என்று மக்கள் முன் பிரச்சாரம் செய்த விஜய், தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் அவரது பிம்பமாக கருதப்படும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்களுக்கு மட்டும் பொறுப்பேற்க மறுப்பது ஏன்?

தனது மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தட்டித்தூக்கத் தெரிந்த முதல்வர் விஜய்க்கு, கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் பதவியிலிருந்து தூக்க என்ன தயக்கம் ?

'குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட சொல்லக் கூடாது' என்ற திரைப்பட வசனத்தைப் போல, பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு உள்ளானதும், அடித்ததும், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அதைப் பற்றிப் பேசக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் விஜய்யின் அண்மைக்கால லட்சியமா என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் தயங்குவது, ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் எத்தகைய தவறுகளைச் செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை உருவாக்குவதோடு, ஆளுங்கட்சியினரின் அதிகாரத் திமிருக்கு முதலமைச்சரே அரசியல் அங்கீகாரம் வழங்குவதாகவும் அமையும்.

அதே நேரத்தில் இந்த குற்றசாட்டுகள் சமூகவலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரம் என அமைச்சர் நிர்மல் குமார் சொல்வது உண்மையென்றால், முதல்வரையும், அரசையும் விமர்சிப்பவர்களை காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி தேடி தேடி கைது செய்துவரும் தவெக அரசு, இந்த பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை ?

எனவே, பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் வெளிவந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேரவைத் துணைத் தலைவர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் மீது உரிய வழக்குகளைப் பதிவு செய்து, பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய்யை கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT