தமிழகம்

“கூட்டணிக்காக எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை” - டிடிவி.தினகரன் சொல்கிறார்

செய்திப்பிரிவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதால் அதிருப்தியில் உள்ளனர். இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் நீண்டகால விசுவாசமிக்க தொண்டராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் கட்சியில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தபோது, மக்களால் பேசப்படக்கூடிய ஒரு புதிய கட்சியில்(தவெகவில்) அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது, அவருக்கு கிடைத்த பெருமையாகத்தான் பார்க்கிறேன்.

அரசியல் அனுபவமுள்ள எந்த ஒரு கட்சியும் அழுத்தம் கொடுத்து ஒரு கட்சியை கூட்டணிக்கு வர வைக்க முயற்சிக்காது. அன்பாக, மரியாதையோடு அணுகிதான் கூட்டணிக்கு அழைப்பார்கள். பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகள், எங்களை அணுகி பேச்சு நடத்துவது உண்மை. ஆனால், நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. நிச்சயம் அமமுக வெற்றிக்கூட்டணி அமைக்கும்.

மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடைபெறமால் பார்த்துகொள்வது மாநில, மத்திய அரசுகளின் கடமை. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதால் அதிருப்தியில் உள்ளனர். இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு தெரிவித்தார். அப்போது மாநில அமைப்புச் செயலாளர்கள் சாருபாலா, ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT