புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ். உடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் அஞ்சலி நிம்பல்கர் உள்ளிட்டோர். படம் எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், அக்கட்சியைச் சேர்ந்தவரும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருமான தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த என்ஆர்காங்கிரஸ் - பாஜக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டு என்டிஏ ஆட்சியில் போலி மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு ஊழல்கள் தொடர்ந்தன.
ஆளும் என்டிஏ அரசின் தவறான ஆட்சிக்கு மக்கள் பதிலடி தருவார்கள். என்டிஏ அரசு மீதான அதிருப்தியால் இண்டியா கூட்டணி புதுச்சேரியில் ஆட்சிக்கு வரும். புதுச்சேரி இண்டியா கூட்டணியில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. எங்கள் கட்சித் தலைமை அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயன்று வருகிறது. இப்போது நாங்கள் போர்க்களத்தில் உள்ளோம். இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதலால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.