அண்ணாமலை |கோப்புப் படம்

 
தமிழகம்

அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல்

செய்திப்பிரிவு

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடிக்கிறது.

கோவையில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளைக் குறிவைத்து அண்ணாமலை தரப்பு வேலை செய்து வந்தது. இதற்கிடையில், கோவை தெற்கு எம்எல்ஏ-வாக இருக்கும் வானதி சீனிவாசன், இந்த முறை வடக்கு தொகுதியைக் கைப்பற்றும் முனைப்பில் காய்களை நகர்த்தினார்.

இந்தசூழலில்தான், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளை பழனிசாமி ஒதுக்கினார். இதில் மயிலாப்பூர், கோவை வடக்கு ஆகிய தொகுதிகள் மட்டுமே இடம்பெற்றன. மற்றபடி, வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட பல முக்கியத் தொகுதிகள் ஒதுக்கப்படாதது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதிகள் பட்டியலில் இல்லை.

          

இந்நிலையில் தான் பியூஷ் கோயல் சென்னை வந்து நேற்று நடத்திய மையக்குழு கூட்டத்தில், அண்ணாமலையை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை சென்னை வந்து பங்கேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக தலைமையிடம் உரிய முறையில் பேசி தொகுதிகளை பெறவில்லை.

கோவை மற்றும் சென்னை மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகளை நாம் பெற்றிருக்க வேண்டுமென்று கூறினார். இதையடுத்து பழனிசாமியிடம் பேசி, சென்னை, கோவையில் சில தொகுதிகளை மாற்றுவதாக பியூஷ் கோயல், அவரை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் தொகுதிகளை மாற்றுவதற்கு அதிமுக தரப்பில் உடன்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT