படங்கள்: எம்.கே.விஜயகோபால்.

 
தமிழகம்

முதல்வர் விஜய் வருகைக்காக திருச்சியில் போக்குவரத்து மாற்றம்: பொதுமக்கள் அவதி

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: திருச்சியில் முதல்வர் வருகையை ஒட்டி சில பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதாலும், இன்னும் சில பகுதிகளில் மாற்றிவிடப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவிரிப் பாலத்தில் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், மரக்கடை, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தும் முதல்வர், மாலை 4.15 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையம் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

படங்கள்: எம்.கே.விஜயகோபால்.

முதல்வரான பின்னர் திருச்சிக்கு முதன்முறையாக வரும் முதல்வர் ஜோசப் விஜய்யை வரவேற்பதற்காக தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரின் வருகைக்கான மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, திருச்சி காவிரிப் பாலத்தில் இன்று காலை 11.30 மணியளவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் உட்பட வடக்கு பகுதிகளில் இருந்து பேருந்துகள் அனைத்தும் திருவானைக் காவல் மாம்பழச் சாலையோடு நிறுத்தப்பட்டது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து காவிரிப் பாலம் கடந்து செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

படங்கள்: எம்.கே.விஜயகோபால்.

அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் என பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சத்திரம் பேருந்து நிலையம் வரை பயணச்சீட்டு எடுத்தும் மாம்பழச் சாலையில் இறங்கிவிட்டதை கண்டித்து பயணிகள் அனைவரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனால் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவானைக் காவல் மாம்பழச் சாலைக்கும், திருவானைக் காவல் மாம்பழச் சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் காவிரிப் பாலத்தில் கடும் சிரமத்துடன் கடந்து சென்றனர்.

இன்னும் சிலரோ தங்களது மூட்டை முடிச்சுகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு காவிரிப் பாலத்தை கஷ்டப்பட்டு கடந்து சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள், மாம்பழச் சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு ஒரு பயணிக்கு ரூ.100 வரை வசூல் செய்தனர்.

SCROLL FOR NEXT