உடுமலை அருகே அமராவதி நகரில் அண்மையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற திப்பிபாறை கிராம மக்கள்.

 
தமிழகம்

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்

அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள திப்பிபாறை மலைவாழ் குடியிருப்பில், சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் அங்குள்ள பழங்குடியின மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த அமராவதி அணையை ஒட்டி திப்பிபாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இக்குடி யிருப்புக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், கரடுமுரடான ஒற்றையடிப் பாதையையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதிக்கு அருகே வசித்த போதிலும், இங்குள்ள மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

ஓடைகளிலும், சுனைகளிலும் கசியும் நீரையே தங்களின் தாகத்தைத் தீர்க்கப் பயன்படுத்தி வருகின்றனர். கோடைக் காலத்தில் நீர்நிலைகள் வறண்டு வருவதால், குடிநீர்சரிவர கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இவர்கள் குடியிருக்க நிரந்தர வீடுகள் இல்லை. ஓலை வேய்ந்த கூரை அல்லது 4 மூலைகளில் நடப்பட்ட மரங்களின் இடையே மூடப்பட்ட தார்ப்பாலின் சீட்டுகள்தான் வீடுகளாக உள்ளன. அங்குள்ள குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. சோலார் விளக்கு வசதிகளும் இல்லை.

இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், போதியவெளிச்சம் இன்றி அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். பள்ளி வயது குழந்தைகள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை.

போதிய கல்வி அறிவு இல்லாததால் இக்குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் அபாயம் உள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களில் பலர் போதிய ஊட்டச்சத்து இன்றி உடல் நல கோளாறுகளுடன் வசிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திப்பி பாறையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக தளிஞ்சி மற்றும் அதனை ஒட்டிய மலை கிராமங்களில் வசித்து வந்தனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த வனத்துறை அதிகாரிகள், இடம்பெயரும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி இடம்பெயரச் செய்தனர்.

ஆனால், அதன்பின் உறுதியளித்தபடி எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. மீண்டும் வனப்பகுதிக்குள் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு செல்ல முடியாதவாறு வனத்துறையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்த நிலை மாற வேண்டும். பூர்வ குடிகளை அவர்கள் இடத்திற்கே சென்று குடியேற அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கூறியதாவது: தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சியினர் இங்கு வந்து வாக்குறுதிகளை அள்ளித் தருகிறார்கள். ஆனால், தேர்தல் முடிந்த பின் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை.

எங்கள் பிள்ளைகளின் கல்விக்கும், பாதுகாப்பான வாழ்விற்கும் அடிப்படை வசதிகளை அரசு உடனே செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மலைவாழ் மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், திப்பிபாறை குடியிருப்பில் நிலவும் இந்த அவலநிலை அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் ஒருங்கிணைந்து இப்பகுதிக்குத் தேவையான சாலை, குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT