புதுச்சேரி: புதுச்சேரி வம்புப்பட்டு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் மரம் முறிந்து விழுந்தது. வகுப்பறையில் இருந்ததால் மாணவர்கள் உயிர் தப்பினர்.
புதுச்சேரியில் நகர மற்றும் கிராம பகுதியில் காலை முதல் மழை விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்று கிராமங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்கன் துளிப் மரம் ஒன்று இன்று முறிந்து விழுந்தது. வழக்கமாக இதன் அருகே மாணவர் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மழையின் காரணமாக மாணவர்கள் அனைவரும் வகுப்பறையில் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மரம் விழுந்த தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.