சென்னை: வெளியூர் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ‘சென்னை ஒன்’ செயலியில் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுமம் வாயிலாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி உருவாக்கப்பட்டு கடந்த செப்.22-ம் தேதிமுதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயலி வாயிலாக மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை க்யூஆர் குறியீடு வழியாக பெறலாம். இந்த 3 சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித் தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற முடியும்.
இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலி மூலம் மாநகரப் பேருந்துகளில் ரூ.1,000, ரூ.2,000-க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டைகளை, ‘டிஜிட்டல்’ வடிவில் பெறும் வசதி உள்ள நிலையில், மெட்ரோரயில், மின்சார ரயில் ஆகியவற்றுக்கான மாதாந்திர பயணச் சீட்டுகளை, இந்த செயலியில் பெற வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் பேருந்துகளில் பயணிக்க, சென்னை ஒன் செயலியில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகரப் பேருந்துகளைப் போல, வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கும் டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்கான நடைமுறைகள் குறித்து, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மத்தியில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
இதற்கான புதிய மென்பொருள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியூர் பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் புதிய மென்பொருள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.