தமிழகம்

ஊர்க்காவல் படையில் முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் சேர்ப்பு - கோவையில் நெகிழ்ச்சி

வெற்றி மயிலோன்

கோவை: கோவை ஊர்க்காவல் படையில் முதல் முறையாக சேர்க்கப்பட்டதால் திருநங்கைகள், திருநம்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமூக நலத்துறையின் கீழ் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் பணி வழங்கப்படும் என கடந்த 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் கீழ், 50 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவையில் 7 திருநங்கைகள், திருநம்பிகள் பணியில் சேர்ந்தனர். இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இது தொடர்பாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கூறும்போது, “வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் அவமானங்களை இதுவரை சந்தித்துள்ளோம். சக மனிதர்களாகக் கூட சமூகத்தில் நாங்கள் மதிக்கப்படாத நிலையில், இன்றைக்கு அரசு ஊர்க்காவல் படையில் பணி செய்ய வாய்ப்பு தந்து எங்களை கைதூக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் இருந்து மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. எங்களை போன்று வாழும் பிறருக்கும், இந்த வாய்ப்பு சாதிப்பதற்கு ஒரு வழிகாட்டியாகவே இருக்கும்” என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திருநங்கைகள், திருநம்பிகள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் சென்னையை சேர்ந்த நிறங்கள் அறக்கட்டளை அமைப்பின் இணை நிறுவனர் டி.டி.சிவக்குமார் கூறும்போது, ”ஊர்க்காவல் படையில் அரசு தந்திருக்கும் அங்கீகாரம் சமூகத்தில் மிகவும் முக்கியமானது. தனியார் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் வேலைவாய்ப்புகளை அளித்தால், அரசின் அங்கீகாரம் ஒரு சமூக மதிப்பாக இன்றைக்கு உள்ளது.

இன்றைக்கு எங்களுக்கு ஊர்க்காவல் படையில் தந்திருக்கும் வாய்ப்பை, முழுமனதார வரவேற்கிறோம். ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசுப்பணி, காவல்துறையில் திருநங்கைகள், திருநம்பிகள் பணியாற்றுகிறார்கள். சிலர் வெளிப்படையாக சொல்வார்கள். பலர் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். வேலையில் வேறு ஏதேனும் சட்டசிக்கல்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் மேலோங்கி இருந்தது.

இன்றைக்கு அரசே அங்கீகரித்திருப்பது, இதுபோன்று பணியாற்றும் பலரையும் தைரியமாக இயங்க வைக்கும். அதேபோல் இனிவரும் இளம் திருநங்கைகள், திருநம்பிகளுக்கும் இந்த வாய்ப்புகள் அவர்களுக்கான பிரகாசமான ஒரு சமூக அங்கீகாரமாகவே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT