சென்னை: தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம், நிதித்துறைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: விடுப்பிலிருந்து திரும்பியுள்ள என்.முருகானந்தம், தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்படுகிறார். இந்த பொறுப்புகளை கூடுதலாக வகித்து வந்த அமுதாவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்படுகிறார்.
இதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம்.ஏ.சித்திக், நிதித்துறை செயலராக நியமிக்கப்படுகிறார். இந்த பொறுப்புகளை வகித்து வந்த டி.உதயச்சந்திரனுக்குப் பதிலாக இவருக்கு இந்த பொறுப்பு அளிக்கப்படுகிறது.
மாநில திட்ட இயக்குநர், ராஷ்டிரிய உச்சாதர் சிக்ஷா அபியான் (RUSA) ஆகிய பொறுப்புகளை வகித்து வந்த முதன்மைச் செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, டாக்டர் கே.மணிவாசன் கூடுதலாக வகித்து வந்த சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைக்கான அரசு முதன்மைச் செயலராக நியமிக்கப்படுகிறார்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வரும் கே.நந்தகுமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். டி.கிறிஸ்துராஜ் வகித்து வந்த இந்த பொறுப்புகள் இவருக்கு மாற்றப்பட்டுள்ளன.
முதல்வரின் செயலர்-III பதவிக்கான ஒரு தற்காலிகப் பணியிடத்தை, ஐஏஎஸ் 'சூப்பர் டைம் ஸ்கேல்' நிலையில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இப்பணியிடம், நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருட காலத்துக்கோ அல்லது இப்பணியிடத்தின் தேவை நீங்கும் வரையிலோ, இவ்விரண்டில் எது முன்னதோ அதுவரை நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.அண்ணாதுரை, பணிமாறுதல் செய்யப்பட்டு, முதல்வரின் செயலாளர்-III பதவியில் நியமிக்கப்படுகிறார்.
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கூடுதல் செயலர் வி.விஷ்ணு பணிமாறுதல் செய்யப்பட்டு, முதல்வரின் கூடுதல் செயலர் எனும் பதவியில் (cadre post) நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.