சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆயத்தப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புரோ மாட்யூல் (PRO Module-ECINET) குறித்த மாநில அளவிலான பயிற்சி முகாம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இசிஐ நெட் புரோ மாட்யூல் என்பது தேர்தல் பணியில் இருக்கும் தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயலியாகும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி பொருட்கள் வருகை, மாதிரி வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு தொடக்கம், அந்தந்த நேரப்படி வாக்குப்பதிவு சதவீதம் அப்டேட், வாக்குப்பதிவு நிறைவு போன்ற தேர்தல் நாள் அப்டேட்களை அதிகாரிகள் கைபேசி செயலி மூலம் நேரடியாக பதிவு செய்ய இந்த புரோ மாட்யூலை பயன்படுத்துகிறார்கள்.
இந்த பயிற்சியில் அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், சந்தோஷ் பதாரியா மற்றும் தருண் மிஸ்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு புரோ மாட்யூலை பயன்படுத்துவது குறித்த நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டது.
தேர்தல் வாக்குப் பதிவு நாளில் வாக்குப் பதிவு விவரங்களை எவ்வித தாமதமுமின்றி உடனுக்குடன் வழங்குவதற்காக, வாக்குப்பதிவு தரவுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கவும், பதிவேற்றவும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்குத் தேவையான முழுமையானத் திறனை வழங்குவதையும், இசிஐநெட் அமைப்பைச் செயல்படுத்துவதையும் மையமாகக் கொண்டு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் இசிஐநெட் செயலியில் உள்ள புரோ மாட்யூல் பயன்பாட்டை உறுதி செய்யும் விதமாக கள சோதனையானது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் ஆகியோர், நேரடிச் சூழலில் புரோ மாட்யூல் எவ்விதக் குறையுமின்றிச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில், இச்செயல்முறையை நிகழ்நேரத்தில் கண்காணித்தனர்.
இன்றைய பயிற்சி மற்றும் களச் சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், புரோ மாட்யூல் செயல்பாடுகள் குறித்த இறுதிக்கட்டக் கள சோதனை, நாளை (15-ம் தேதி) அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.