சென்னை: நண்பர்களுடன் கடலில் குளித்தபோது, அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்தார். சென்னை, புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் இஷாந்த் குமார் (17).
இவர் 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேரவிருந்தார். இந்நிலையில், இஷாந்த் குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்றுமுன்தினம் காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றார்.
அங்கு அனைவரும் ஒன்றாக கடலில் குளித்தனர். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் தொட்டுப் பிடித்து விளையாடியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், திடீரென எழுந்த ராட்சத அலை, இஷாந்த் குமாரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து, நண்பர்கள் திருவான்மியூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு திருவான்மியூர் மீனவர் குப்பம் அருகே இஷாந்த் குமாரின் இறந்த உடல் கரை ஒதுங்கியது.
இதையடுத்து, போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, திருவான்மியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.