காஞ்சிபுரம்: தவெக அரசை கண்டித்து திமுக மகளிரணி மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு குறுகிய இடத்தில் அனுமதி வழங்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள நடுத்தெருவில் நடைபெற்ற ஆர்ரப்பாட்டத்துக்கு மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மாலதி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் நிவேதா ஜெசிகா, மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான க.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
போக்குவரத்து நெரிசல்
குறுகிய இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், பங்கேற்பாளர்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர். இதனால் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். ஆட்சியர் அலுவலகம் அருகே வழங்கப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என திமுகவினர் குற்றம்சாட்டினர்.
விசிறி விநியோகம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு விசிறிகள் வழங்கப்பட்டன. மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அனைவருக்கும் இலவசமாக விசிறி வழங்கப்படுவதாக திமுகவினர் தெரிவித்தனர்.