சென்னை: யுபிஐ சேவை கட்டண விதிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின்படி, வங்கி பணபரிவர்த்தனைகளை இலவச யுபிஐ பணபரிவர்த்தனைக்கு மாற்றி, பொது மக்களிடையே டிஜிட்டல் மயமாக்கலை ஊக்கப்படுத்தி வந்தது. இதை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் உள்ள யுபிஐ பணபரிவர்த்தனைக்கு அக்டோபர் 15 முதல் 0.4 சதவீதம் சேவை கட்டணம் விதிப்பதாகவும், அச்சேவை கட்டண விதிப்பை வணிகர்கள் தான் செலுத்த வேண்டும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு அகில இந்திய அளவில் மிகப் பெரும் எதிர்ப்பு உருவாகி இருக்கின்றது. இதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், எதிர்ப்பு பேட்ஜ் அணிந்து வியாபாரத்தில் ஈடுபடும் அறப்போராட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை சந்தையில் நடைபெற்றது.
இதில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று, யுபிஐ பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டண விதிப்பு எதிர்ப்பு பேட்ஜை வியாபாரிகளுக்கு வழங்கி, அறவழிப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “அமெரிக்கா - ஈரான் வளைகுடா போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல், எரிபொருட்கள் விலை மிகப் பெரும் உயர்வை சந்தித்திருக்கின்றது. இந்த எரிபொருள் உயர்வால், பெருமளவு போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்து, மக்கள் அன்றாட பயன்படுத்தும் பொருட்கள் விலையேற்றம் கண்டிருக்கின்றது.
இந்தச் சூழலில் வணிகர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள யுபிஐ சேவை கட்டணமும், மேலும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் வணிகர்களிடையே நிலவுகின்றது.
யுபிஐ சேவை கட்டணத்தை மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் ரத்து செய்யவேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், தமிழகத்தில் அமைப்பு ரீதியாக உள்ள 61 மாவட்டங்களில் மாவட்ட தலைவர்கள் தலைமையில் முக்கிய நகர் பகுதிகளில் வணிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி யுபிஐ சேவை கட்டண விதிப்பு எதிர்ப்பு பேட்ஜ் அணிந்தும், தங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் விளம்பரத்தட்டிகள் வைத்தும், மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஒன்றுபட்டு முதற்கட்ட அறவழிப்போராட்டம் நடத்தி இருக்கிறோம்.
இதில் பேரமைப்பின் மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநிலத் துணைத் தலைவர் எம்.எஸ்.பஷீர் அகமது, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், செயலாளர் ஏ.ஷேக்முகைதீன், பொருளாளர் ஏ.சத்தியரீகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.