தமிழகம்

‘ஜெம்’ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பக் கோரி டி.ஆர்.பாலு மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘ஜெம்’ வீரமணி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை திமுக பாதுகாத்ததாகக் கூறிய முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கும்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி, திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில், ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததாக முதல்வர் விஜய்-யும், ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்து வைத்ததாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், ஜெம் வீரமணியைப் பாதுகாப்பதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் அவரிடமிருந்து 500 கோடி ரூபாய் பெற்றதாக சட்ட அமைச்சர் நிர்மல் குமாரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாநிலத்தின் முதல்வரும், இரு அமைச்சர்களும் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பதால், இக்குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை அவர்களிடமிருந்து பெற, அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக் கோரி டி.ஆர்.பாலு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முதல்வர், அமைச்சர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் உள்ளனவா? இருந்தால், அவற்றை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காதது ஏன்?

விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு அனுமதியின்றிக் கிடைத்துள்ளனவா? அவற்றிலுள்ள தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள இவ்வழக்கில், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கோ, மறைக்கப்படுவதற்கோ இடமளிக்காமல் அவற்றை உடனடியாகச் சேகரிக்க வேண்டும்.

பொய் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, விசாரணை ரகசியங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பொருந்தக்கூடிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT