கோப்புப் படம்
திருச்சி: தமிழகத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் டன் அரிசி, யாருக்கும் பயன்படாமல் வீணாகும் நிலையில் உள்ளது.
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் நெல், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப வழங்குகிறது. இதில் அரிசியை கிலோ ரூ.39.10-க்கு வழங்குகிறது.
இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யும் நெல் ரகம் தரமானது என்பதால், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டங்கள், சிறைகள் மற்றும் அரசு மாணவர் விடுதிகளுக்கு இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தே தமிழக அரசு அரிசியை கொள்முதல் செய்து வழங்குகிறது.
பேரிடர் மற்றும் வறட்சி காலங்களில் மக்களுக்கு வழங்குவதற்காகவும், மாநில அரசுகளின் அவ்வப் போதைய தேவைக்கு வழங்குவதற்காகவும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை இந்திய உணவுக் கழகம் தனது சொந்த கிடங்குகளிலும், மத்திய சேமிப்புக் கிடங்குகளிலும், தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கிலும் பல லட்சம் டன் சேமித்து வைத்துள்ளது.
இவ்வாறு சென்னை, விழுப்புரம், திருச்சி, கடலூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் அரிசிக்கு, மூட்டைக்கு மாத கட்டணமாக ரூ.5.39 வீதம் கிடங்கு நிறுவனங்களுக்கு இந்திய உணவுக் கழகம் வழங்குகிறது.
ஆனால், இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியை 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்படுத்தாமல் இருப்பதால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், திருச்சி மத்திய சேமிப்புக் கிடங்கில் மட்டும் 28 ஆயிரம் டன் அரிசி, தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் 6,300 டன் அரிசி என மொத்தம் 34,300 டன் அரிசி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பு வைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, தமிழகம் முழுவதும் பல லட்சம் டன் அரிசி, 3 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவரம் அறிந்தவர்கள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக இந்திய உணவுக் கழகத்திடம் அரிசி கொள்முதல் செய்வதை வெகுவாக குறைத்து விட்டது.
இதனால், இந்திய உணவுக் கழகம் சேமித்து வைத்துள்ள அரிசியை இடமாற்றம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு மேல் அரிசியை இருப்பு வைத்தால், அரிசி நொறுங்கி, பூஞ்சை பாதித்து உண்பதற்கு லாயக்கற்றதாகி விடும். 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால் தரத்தைப் பொறுத்து கால்நடை தீவனம், மதுபான தயாரிப்புக்கு அரிசியை வழங்கி விடுவர்.
இந்நிலையில், 3 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, எதற்கும் பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகி இருக்கும். இந்த பயன்படாத அரிசியை இருப்பு வைக்க கடந்த 3 ஆண்டுகளாக அரிசி விலையைவிட அதிக வாடகை செலுத்தி வருகின்றனர்.
நிகழாண்டு குறுவை, சம்பா பருவம் பொய்த்து அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அதிகாரி
களின் அலட்சியம் காரணமாக பல லட்சம் டன் அரிசி யாருக்கும்பயன்படாமல் வீணாகிப் போய் உள்ளது வேதனை அடையச் செய்துள்ளது என்றனர்.